கானல் உறவுகள்………

கானல் உறவுகள்………

என் விழியே………

           என்று ஆரம்பித்த அந்த கடிதத்தின் ஆரம்ப வரிகளை வாசித்தபோது  அவளின் மனதில்  இருந்து எழுந்த மெல்லிய நடுக்கம் உடலெங்கும் பரவி பெருமூச்சாக வெளிவந்தது. கடிதம் முழுவதையும் வாசிக்கவேண்டும் போலவும், அப்படியே அந்த கடிதத்தை கண்களில் வைத்து  சத்தமிட்டு அழவேண்டும் போலவும் இருந்தது ரேவதிக்கு. தன்னுணர்வில்லாமல் கடிதம் கிடந்த அந்த கொப்பியை மூடியவள், ஒரு உந்துதலால் கொப்பியின் முதல் பக்கத்தை  திறந்து பார்த்தாள். “மறத்தல் கொடுமையானது அதிலும் கொடுமையானது மறந்தது   போல நடிப்பது” என அவளின் கையெழுத்தில் எழுதப்பட்டு இருந்தது.

 

            தனக்கு மட்டும் கேட்கக்கூடியவாறு  அந்த வரிகளை வாசித்தவளுக்கு, முகத்தில் அறைந்தது போல இருந்தது அந்த வரிகள்.  அறையின் புழுக்கமும், பழைய புத்தகங்களை கிண்டியதால் எழுந்த நமச்சல் மணமும், கையில் கிடைத்த கடிதம் இருந்த கொப்பியும் தொடர்ந்தும்  அந்த அறையில் இருக்கவிடாது செய்தன. கொப்பியை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியில்  வந்தவள் சாய்மனைக்கட்டிலில் தந்தையார் படுத்திருப்பதையும், குசினிக்குள் தாய் பெருமெடுப்பில் சமையலில் ஈடுபட்டிருப்பதையும் கவனித்தாள், சத்தமில்லாமல் பின் கதவை திறந்து வளவுக்குள் இருக்கும் கிணற்றடி நோக்கி நடந்தாள். செழித்து நின்ற வாழைகளும், கொய்யாமரமும், நிழல்களை பரப்பி  நின்றதால் ஏற்பட்ட  குளிர்மை அவளது பதட்டத்தை குறைத்து அவளை ஓரளவு இயல்புக்கு கொண்டுவந்தன.

          அந்த இயற்கையான குளிர்மையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழ, சுற்றிப்பார்த்தாள், உடுப்பு துவைக்கும் கல்தான் நிழல்படிந்து  இருப்பதற்கு வசதியான இடமாக தோன்றியது ரேவதிக்கு. பயன்படுத்தப்படாமல் இருந்த அந்த கல்லில் இருந்தவள், கிணற்றை வாஞ்சையுடன் பார்த்தள், கப்பியல் பாவிக்கப்படாமல் கறல் படிந்து கிடந்தது. வாளி தண்ணியே காணாமல் கொஞ்சம் உக்கியும், ஒருபக்க செவி கழன்றும் கிடந்தது, கிணற்றுப் பத்தலில்  பாசிகளோ மண்களோ முன் போல சிறு சிறு சவற்கார துண்டுகளோ இல்லாமல் காய்ந்து வறண்டு போய் இருந்தது, மறைப்புக்காக  கட்டிய நான்குமட்டை கிடுகுவேலி இருந்ததற்கான எந்த ஒரு சுவடும் இல்லாமலும்  கிடந்தது.  சகிக்கமுடியாமல் திரும்பியவளுக்கு, வீட்டின் பின்பக்க கதவை அண்டி உயர்ந்து நின்ற தண்ணீர்த் தாங்கியும் அதனோடு இணைத்துகட்டிய குளியலறையும் இப்போது  நாங்கள் தான் எல்லாமும் என்ற  திமிருடன் நிற்பது போல தோன்றியது.

காலமாற்றம் தன்னில் மட்டுமல்ல சூழலிலும் கூட மாற்றங்களை திணித்திருப்பதை, அந்த மாற்றங்களை இலகுவாக உள்வாங்கி அதனூடாக இயைந்து வாழப் பழகிவிட்டதையும் நினைத்துக்கொண்டவள் கையில் இருந்த கொப்பியை விரித்து கடிதத்தினை எடுத்தாள். தனக்குள் மெல்லியதாக  சிரித்துக்கொண்டவள்,  இந்த ஒரு கடிதத்தை தருவதற்கு தான் எவ்வளவு பாடுபட்டு அலைந்து பயந்து திரிந்தான், கடைசியாக சைக்கிளின் கைபிடிக்குள் வைத்துவிட்டு, அதை சொல்லவந்து தடுமாறிநின்றவனை புரிந்து, ஒருவாறு என்ன சொல்லுறான் என்பதை கிரகித்து கைபிடிக்குள் இருந்த கடிதத்தினை எடுத்த அந்த காலம்  நினைவில் வர  முகம் முழுதும் பூரித்துப்போய்  அப்படியே அந்த கல்லூரிக் கால நினைவுகளில் மூழ்கினாள்.

       சேகர்,சிறுவயதில் இருந்தே ரேவதிக்கு தெரிந்தவனாக இருந்தாலும், ரேவதியின் மனதுக்கு அதிகம் நெருக்கமானது கல்லூரிக்காலங்களில் தான். அதுவும் இருவரின் கல்லூரிகளும் அருகருகில் அமைந்துவிட, இன்னும் வசதியாகி விட்டது. சேகரின் துடுக்குத்தனமான செயல்களும், பொது வேளைகளில் காட்டும் ஈடுபாடுகளும் ரேவதியை கவர்ந்திருந்தாலும், கடைசிவரை அவள் எதையும் வெளிப்படுத்தி நின்றதில்லை. ஆனால் ரேவதியின் அடிமன ஆசைகளின் தூண்டல்களோ என்னவோ,சேகரின் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக ரேவதி உள் நுழைந்து ஒரு நிலையான இடத்தினை பெற்றுவிட்டாள். சேகர் தன்னை காதலிப்பதை தெளிவாக அறிந்து கொண்டவள் அடைந்த சந்தோசத்துக்கு அளவே இல்லாமல் போனாலும், கடைசிவரை சேகரிடம் பிடிகொடுக்காமல் நடிக்க தொடங்கினாள். மிக சாதரணமாக எல்லா பிரச்சனைகளையும் சரி, பொது அலுவல்களையும் சரி ஒரு மொக்கு துணிவுடன் கையாளும் சேகர் தன்னிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதையும், சங்கடப்பட்டு விலகுவதையும், கூடி திரிந்து ஏத்திவிடும் கூட்டாளிகளை முறைப்பதையும் நினைத்து நினைத்து மனதுக்குள் மகிழ்வாள். சிலவேளைகளில் எங்கியும் இருக்கிறாள் வந்து துணிந்து சொல்கிறானில்லையே என்று. அந்த சமயங்களில் தானாக கேட்டுவிட மனம் உந்தினாலும் இயற்கையான நாணமும், சமுதாய கண்களும் ரேவதியை தடுத்து விட்டிருந்தன.

       பல இரவுகள் இவனாலேயே ரேவதி தூக்கங்களை தொலைத்து தவித்திருந்திருக்கிறாள். அப்போதெல்லாம் இரவுகளில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். தினமும் எங்காவது அருகில் வெடிச்சத்தமும், குண்டுச்சத்தமும் கேட்கும். தவித்துப்போவாள். ஊரிக்காட்டின் முச்சந்தியில் தானே நிப்பான் எந்தநேரமும், என்னாச்சோ என்ற தவிப்பில் வைரவனை கும்பிடத்தொடங்குவாள், சேகரின் சில செயல்களை அவளும் கேள்விப்பட்டு இருந்திருப்பதால் எப்போதும் அச்சம் கலந்த உணர்வு அவளை வாட்டிக்கொண்டு இருந்தது. மறுநாள் அவனை சந்தியிலோ அல்லது கல்லூரியின் வாசலிலோ கண்ட பின்தான் அமைதியடைவாள். காதலை சொல்லாமல் அவளும், சொல்ல பயந்து அவனும், பார்த்த்துக்கொண்டே வாழ்ந்த அந்த நாட்கள் வலியும் வசந்தமும் சுமந்த நாட்கள்.  எல்லாத்திலும் வீரம் காட்டும் உவருக்கு என்னிட்ட கதைக்க மட்டும் என்னவாம்…….. என மனதுக்குள் திட்டி, வெறுப்போ கோபமோ என்று புரியாத ஒரு உணர்வில் தவிப்பாள்.

     இப்படியாக கழிந்து கொண்டிருந்த ஒரு நாளில்தான்,பஸ்சில் போவதற்காக  புளியடியில் விட்டுவிட்டு  சைக்கிள்  கான்ரில் கைபிடிக்குள் கடிதத்தை வைத்துவிட்டு பயந்து நடுங்கி தடுமாறி சொல்லி நின்றவன், அப்பாடா இப்பவாச்சும் கதைத்தானே  என்று எழுந்த சந்தோசத்தையும் மறைத்து சேகரை முறைத்த முறைப்பை நினைத்த ரேவதி அடுத்த மூன்று  நாளும்   ரோட்டுக்கு வராமல் அவன்  ஒளிந்து திரிந்ததை நினைத்து வாய் விட்டு சிரித்தாள்.

                      இனியும் அலையவிடுவது சரியில்லை என்று தனது விருப்பத்தையும் சொல்ல முடிவு செய்த அன்று, காலையில் கல்லூரிக்கு புறப்பட ஆயத்தமாகியபோது, பேப்பர் எடுக்கப்போன தந்தை பதறியபடி வந்து பிள்ளை இவன் சேகரை இரவு தூக்கியிட்டாங்களாம், சந்தியில அவன்ர  சைக்கிளும் சரமும் போனும் கிடந்தாம். கடவுளே நான் அப்பவே நினைச்சனான் என்ன சாந்தியில புது முகங்கள் நிக்குது என்று, பிள்ளை நான் உதில அவன்ர வீட்டடிக்கு ஒருக்கா போடு வாறன், என்றபடி தந்தை வந்த பரபரப்புடன் திரும்பி சென்றார். அப்படியே புத்தக பையை இறுக்கி பிடித்தவள்  இடிந்து போய் நின்றாள். விழிகளில் கொஞ்சம் கொஞ்சமாக  நீர் திரளத்தொடங்கியது. செய்வதறியாது சைக்கிள் கூடைக்குள் புத்தக பையை எடுத்து போட்டவள் சந்தியை நோக்கி சைக்கிளை செலுத்தினாள். சந்தியில் சேகரின் நண்பர்கள் நின்றார்கள், அவர்களின் விழிகள் பயம் படர்ந்து கலங்கி தெரிந்தது. இவளை கண்டதும் தலையை குனிந்து கொண்டனர்.

        இண்டைக்கு வரலாம், நாளைக்கு வரலாம், அங்கே இருக்கிறானாம். அவன்தான் இப்ப காட்டிக்கொடுக்கிறானாம், இவங்கள்  காசு கேட்டவங்களாம் இனி விடுவாங்கள்,  என்றெல்லாம் ஒரு உறுதியான தகவல்களும் இல்லாமல் உறவுகள்  கதைத்தபடியே காலம் கடந்து போனது. அதே காலம் தன் மேல் திணித்துக்கொண்ட இன்றைய வாழ்வையும் அதனோடு  மீட்டுப்பார்த்தவள் தளர்ந்து போனாள்.  வாழை இலையில் இருந்த கிளிகூட்டத்தை வெறித்துப்பார்த்து ஆழ்ந்த பெருமூச்சொன்றை விட்டாள்.   “உதில என்ன பிள்ளை செய்யிறா, வீட்டுக்க ஏசி போட்டுக்கிடக்குதானே”… என்றபடி அருகில் வந்த தாயை திடுக்குற்று திரும்பி பார்த்தாள்.  “இந்தா மாப்பிள்ளை கதைக்கிறார்” என்று போனை ரேவதியிடம் கொடுத்தவள், ரேவதியின் கலங்கிய கண்களை கண்டவுடன், “லண்டனில இருந்து வந்து இரண்டு நாளாகவில்லை அதுக்குள்ளே புருஷனை நினைச்சு அழுகையை பார்”, என்ற குரலில் ஒலித்த பெருமிதத்தை அறவே வெறுத்த ரேவதி, கணவனுடன் கதைக்கத்தொடங்கினாள். கடமைக்காக………

 

 

 

THANKS:netkoluvan

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

WordPress.com.

Up ↑

%d bloggers like this: