உடைந்த பாத்திரமும் சில ரோஜாப்பூக்களும்

உடைந்த பாத்திரமும் சில ரோஜாப்பூக்களும்

 

[crack_pot.jpg]

சீனாவில் ஒரு குக்கிராமத்தில் ஒரு பாட்டி வசித்து வந்தாள். அவளிடம் இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்கள் இருந்தன. ஒரு நீளமான கம்பில் கயிற்றைக் கட்டி கயிறுடன் பாத்திரங்களை இணைத்து விடுவாள். வெகுதொலைவு நடந்து சென்று இந்த இரண்டு பாத்திரங்களிலும்

நீரை நிரப்பி அவற்றைத் தோள்பட்டையில் சுமந்துகொண்டு வீட்டுக்கு வருவாள்.
அவளிடம் இருந்த இரண்டு நீர் சுமக்கும் பாத்திரங்களும் வித்தியாசமானவை. ஒன்று எந்தவிதக் குறைபாடும் இல்லாமல் ஓட்டை உடைசல் இல்லாத பாத்திரம். மற்றொன்றில் ஒரு சிறிய ஓட்டை இருந்தது. முழுக்க முழுக்க நீரை நிரப்பினாலும் வீட்டுக்கு வந்து சேர்வதற்குள் பாதி தண்ணீரானது வெளியில் கொட்டி வீணாகிவிடும்.
இருப்பினும் ஒவ்வொரு நாளும் பாட்டியானவள் நீர் நிரப்பும்போது இரண்டு பாத்திரத்துக்கும் சம அளவு நீரை நிரப்பியே தூக்கிச் செல்வாள். வீடுவரை சுமையைத் தூக்கிச் சென்று பார்த்தால் ஒன்றரைப் பாத்திரத்தில் மட்டுமே நீரைக் காண இயலும். பழுதில்லாத முதல் பாத்திரத்தில் அனைத்து நீரும் பத்திரமாக இருக்கும். ஆனால் உடைந்து போகி ஓட்டையுடன் இருக்கும் இரண்டாவது பானையில் பாதியளவு தண்ணீ மட்டுமே இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பந்தம் தொடர்ந்துகொண்டு இருந்தது.
ஒரு நாள் பாட்டியின் ஒன்பது வயது பேத்தி முறையிட்டாள் "பாட்டி. எனக்கு மிகவும் மன வருத்தமாக உள்ளது. ஒரு பாத்திரத்தை மட்டும் அந்த குயவன் முடமாகப் படைத்துவிட்டான். நீயும் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டைப் பாத்திரத்தையும் பயன்படுத்துகிறாய். 100 சதவீதம் நீரை நிரப்பினாலும் வீடு வந்து சேர்வதற்குள் பாதி நீர் வீணாகி விடுகிறது. ஆனால் நல்ல பாத்திரத்தைப் பார். அதனால்தானே உனக்கு முழுக்க முழுக்க நன்மை. பேசாமல் ஓட்டைப் பாத்திரத்தைக் கீழே போட்டு உடைத்துவிட்டு புதிய நல்ல உடைசல் இல்லாத பாத்திரமாக வாங்கிக்கொள். உனக்கும் நல்லது".
இப்படி சிறுமி சொன்னதைக் கேட்ட பாட்டி சொன்னாள் – "சிறுமியே ஒன்றைக் கவனித்தாயா? நான் நீரைச் சுமந்து வரும் பாதையின் இரு ஓரங்களையும் கவனித்ததுண்டா? நல்ல பாத்திரம் இருந்த பக்கமாக முட்செடிகள் மட்டுமே இருக்கும். ஆனால் ஒட்டைப் பாத்திரத்தைக் கொண்டு வந்த பக்கமாகப் பார்த்தாயா? அந்தப் பாத்திரத்தின் நீர் சிந்திய பக்கமாக அழகழகான ரோஜா மலர்களைக் காண்கிறாயே. அவற்றை நீயும் சூடிக்கொண்டு அழகுடன் திரிகிறாயே. அந்த ரோஜாச் செடிகள் நல்ல நிலையில் வளர்ந்ததற்கும், அவை பூப்பூப்பதற்கு யார் காரணம் – அந்த ஓட்டைப் பாத்திரம் தானே. அதனுடைய நீர் சிந்தியதால்தானே அவை பூப்பூக்கின்றன"
நான் குயவனிட்ம் பாத்திரம் வாங்கும்போதே அது ஒட்டைப்பாத்திரம்தான் என நன்றாகத் தெரியும். தெரிந்துதான் வாங்கினேன். மலர்ச்செடிகளுக்கான விதைகளை ஒரு பக்கமாகத் தூவினேன். அவற்றில் நீரை ஊற்றுவதற்கு அந்த ஓட்டைப்பாத்திரத்தைப் பயன்படுத்தினேன். ஒவ்வொரு நாளும் நீரூற்றினேன். இப்போது அந்தச் செயலுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
நீதி : ஒவ்வொரு மனிதனும் தவறுடனே பிறக்கிறான். அவரவருக்கும் தனிப்பட்ட பிழைகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தவறுகளே நமது வாழ்வைச் செம்மைப் படுத்தவும், சுவையூட்டவும் செய்கின்றன.தவறுகளைக் காரணம் காட்டிப் பிறரை ஒதுக்கிவிடக் கூடாது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: