மகாவம்ச சிந்தனை ஒரு வரலாற்று மீள்பார்வை

www.tamilskynews.com வெளியான கட்டுரை

ஸ்ரீலங்கா ஒரு பவுத்த நாடு. தேவநம்பிய தீசன் (கிமு 247 – 207) ஆட்சிக் காலம் தொடக்கம் பவுத்தம் இலங்கைத் தீவில் நிலைத்து வருகிறது.
சிங்கள தேசியத்தின் அடையாளம் பவுத்த மதமாகும். சிங்கள தேசியத்தின் பிரிக்கமுடியாத அம்சமாக பவுத்த மதம் இன்று திகழ்கிறது. சிங்கள அடையாளத்தின் வடிவம், வரலாறு, சமூக உளவியல் என அனைத்துமே ஏதோ ஒருவகையில் இலங்கையின் தேரவாத பவுத்தத்தோடு பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இன்று பவுத்த தேரர்களும் அவர்களுடைய பீடங்களும் இல்லாத ஒரு சிங்கள சமூகத்தை நாம் கற்பனைசெய்து கூட பார்க்க முடியாது. அவ்வளவு தூரம் சிங்கள இன அடையாளமும் பவுத்த மத உணர்வும் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
மகாவம்ச சிந்தனையில் ஊறிப் போன சிங்களவர்கள் தங்களை ஆரியர் என்றும் தாங்களே இலங்கையின் மூத்த குடியென்றும் தங்களுக்கே நாடு சொந்தம் என்றும் அய்யாயிரம் ஆண்டுகள் பௌத்த தர்மத்தைக் காப்பாற்றிப் பேணுவதற்குரிய இடமாக இலங்கைத் தீவு புத்தரால் ஆசிர்வதிக்கப்பட்டது என்றும் நம்புகிறார்கள். மேலும் பவுத்த -சிங்கள அரசியல் மேலாண்மைக்கும் சிங்கள தேசத்தின் இருப்பிற்கும் தமிழரே பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் எனவும் நினைக்கிறார்கள். இந்த மகாவம்ச சிந்தனையே இன்றைய இனப் போருக்கு அடிப்படைக் காரணம் ஆகும்.
மகாவம்ச ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்த பின்னரே பவுத்த சிங்கள தேசிய உணர்வு மெல்ல மெல்ல சிங்கள அறிவுப் பிழைப்பாளர் மற்றும் மே

ல்தட்டு சிங்களவர் மத்தியில் வேரூன்றத் தொடங்கியது.
மகாவம்சம் 6 ஆம் நூற்றாண்டில் மகாநாம என்ற புத்ததேரரால் பாளி மொழியில் எழுதப்பட்ட இதிகாசம் ஆகும். மகாவம்சம் என்றால் "பெருங்குடியினர்" என்பது பொருளாகும். இது இலங்கைபற்றிய செவிவழிக் கதையோடு தொடங்கி மகாசேனன் ஆட்சியோடு (கி.பி. 334- 362) முடிவுறுகிறது. இலங்கைத் தீவிற்குப் பவுத்த சமயம் வந்த வரலாறு குறித்தும், இலங்கையை ஆட்சி புரிந்த மன்னர்களது வரலாறு குறித்தும் மகாவம்சம் விபரிக்கின்றது. பவுத்தத்துக்குரிய அந்தஸ்தை மீண்டும் நிலைநாட்ட தமிழருக்கு எதிராக துட்டன் னைமுனுவும் மகாசேனனும் வர்ணிக்கப்படுகிறார்கள். மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் புத்தரின் மூன்று இலங்கை வருகையை விபரிக்கின்றது.
இதன்; இரண்டாவது பாகம் சூழவம்சம் எனப் பெயர் பெறும். இதன் முதல் பிரிவு 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்மகீர்த்தி என்ற பவுத்ததேரரால் எழுதப்பட்டது. மகாவம்சத்தின் கதைநாயகன் துட்டன் கைமுனு என்றால் (கி.மு. 101-77) சூழவம்சத்தின் கதைநாயகன் தாதுசேனன் ஆவான். (கி.பி. 1137-1186).
விஜயனின் வருகையோடுதான் இலங்கையின் வரலாறு தொடங்குகிறது என்பதில் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் பிடிவாதமாக உள்ளார்கள்.
மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விபரமாக ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும்.
விஜயன் இலங்கைத் தீவில் காலடி எடுத்து வைத்த போது அங்கு பஞ்சஈஸ்வரங்கள் (அய்ந்து ஈஸ்வரங்கள்) இருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. அய்ந்து சிவாலயங்களில் நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம் ஆகிய நான்கும் பல்வேறு இடர்ப்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த தொண்டேஸ்வரம் இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்டது. பின்னர் அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் அதனை விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.
இலங்கைத் தீவுக்கு புத்தபெருமான் மும்முறை வந்ததாக மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயம் குறிப்பிடுகிறது. முதல்முறை வந்தபோது ஆட்சியுரிமைபற்றித் தங்களுக்குள் மோதிக்கொண்ட இரண்டு இயக்க அரசர்களிடையே சமாதானத்தை நிலை நாட்டினார் என்று குறிப்பிடுகிறது

.
மகததேசத்தில் உள்ள உருவெல என்னும் இடத்திலுள்ள அரச மரத்தின் அடியில் ஒரு வைகாசி மாதத்துப் பௌர்ணமி நாளில் கவுதம புத்தர் (கிமு 560–480) அமர்ந்திருக்கின்றார். அப்போது அவருக்குச் சில நிகழ்ச்சிகள் புலனாகின்றன. பவுத்த மதம் பெரு வளர்ச்சியடையக் கூடிய இடம் இலங்கைத் தீவு என்பதும் ஆனால் அங்கு ஏற்கனவே வசித்து வருகின்ற இயக்கர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்றும் புத்தர் எண்ணுகின்றார்.
இலங்கைத்தீவு எங்கணும் வாழ்கின்ற இயக்கர்கள் குறிப்பிட்ட ஒரு தினத்தில் மகாவலி கங்கை அருகே வந்து கூடுவது வழக்கம். அந்த வேளையில் புத்தர் அங்கே வான்வழியாகப் பறந்து வந்து பயங்கரமான சூறைக்காற்றை உருவாக்கி இயக்கர்களைப் பயமுறுத்துகின்றார். உடனே இயக்கர்கள் இந்த இலங்கைத்தீவு முழுவதையுமே உமக்குத் தருகின்றோம். எங்களைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்ச புத்தர் அவர்களை மலைநாட்டுக்கு அனுப்பி வைக்கின்றார்.
புத்தர் இரண்டாம் முறை இரண்டு நாக மன்னர்கள் தமக்குள்ளே போர் புரிவதைத் தடுப்பதற்காக வருகின்றார். முன்பு சூறைக்காற்றை உருவாக்கி ஆதிக்குடிகளைப் பயமுறுத்தி அடிபணிய வைத்த புத்தர் இம்முறை பயங்கர இருளைப் பரவச்செய்து நாக மன்னர்களையும் அவரது வீரர்களையும் பயம் கொள்ள வைக்கின்றார். பின்னர் அங்கு வாழ்ந்த எட்டுக்கோடி நாகர்களுக்கு ‘புத்தம்- தர்மம் -சங்கம்’ என்ற போதனைகளை அருளுகின்றார்.
இது நடைபெற்று மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் புத்தர் மீண்டும் இலங்கைக்கு வருகை செய்கின்றார். கல்யாணி (களனி) என்ற நாட்டின் நாக மன்னனின் வேண்டுதலை ஏற்று அங்கு சென்று அந்த இடங்களை அருள்வாழ்த்தித் திரும்புகின்றார்.
புத்தர் இலங்கைத் தீவுக்கு வந்ததாக மகாவம்சம் சொல்லும் கதை கற்பனை ஆகும். புத்தர் வட இந்திய புலத்தை விட்டு வேறெங்கும் அவர் செல்லவில்லை. இருந்தும் மகாவம்சம் புனைந்துள்ள கதையில் மறைந்திருக்கும் சில உண்மைகளை நாம் கவனிக்க வேண்டும். இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர்களும் நாகர்களும் ஆவர்.
இலங்கையை இயக்கர்குல மன்னனா

ன இராவணன் ஆண்டான் என்ற இதிகாசக் கதை இயக்கர்கள் இலங்கையில் வாழ்ந்ததை எண்பிக்கிறது.
இயக்கர்களை அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் நாக என்ற சொல்லை அடையாகக் கொண்ட பெயர்களும் (நாகநாதன், நாகலிங்கம், நாகமுத்து, நாகம்மா) இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளை மகாவம்சம் மறைமுகமாகச் சுட்டிக் காட்டுகின்றது.
தமிழர்களுக்கு எதிரான போரில் களம் செல்லும் படையினர் பவுத்த தேரர்களால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். போருக்குப் பயன்படுத்தப்படும் கொலைக் கருவிகளும் பவுத்த தேரர்களால் ஆசீர்வதிக்கப்படுகின்றன. படையினரின் பாதுகாப்புக்கு பிரித் ஓதி அவர்களது கையில் மஞ்சள் கயிறு கட்டப்படுகிறது. “புத்தம் சரணம் கச்சாமி, தர்மம் சரணம் கச்சாமி, சங்கம் சரணம் கச்சாமி" என்று நாள்தோறும் ஓதும் புத்த தேரர்களே இதனைச் செய்கிறார்கள்.
தமிழர்களுக்கு எதிரான போரை என்ன விலை கொடுத்தும் வெல்ல வேண்டும் என்று அஸ்கிரிய-மல்வத்தை பவுத்த மத பீடாதிபதிகள் குரல் கொடுக்கிறார்கள். ஏனைய ராமண்ணா, அமரபுர பவுத்தமத பீடங்களும் அஸ்கிரிய – மல்வத்தை மதபீடங்களின் பல்லவிக்கு அனுபல்லவி பாடுகின்றன.
மனிதன் எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்பது பவுத்த மதத்தின் அடிநாதமான கோட்பாடாகும். புத்தர் உயிர்கள் மூவகைப்பட்டதென்று சொல்லியிருக்கிறார். அதாவது மனிதர், விலங்குகள், தாவரங்கள். இவற்றில் எதற்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது. தீங்கு விளைவித்தால் அது எல்லா உயிர்களுக்கும் கருணை காட்ட வேண்டும் என்ற கோட்பாட்டுக்கு தீங்கு விளைவித்ததாக முடியும். போர் இந்த மூவகை உயிர்களையும் கொல்கிறது.
இப்படி எல்லா உயிர்களிடத்தும் அன்பு, கருணை காட்ட வேண்டும் என்று போதிக்கும் பவுத்த மத தேரர்கள் ஆயுதப் போரை எப்படி ஆதரிக்கிறார்கள் என்பது புரியவில்லை.
பவுத்த மதத்தைத் தழுவிய முத

ல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முந்தி அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவன் நாகர் வம்சத்தைச் சேர்ந்தவன். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான்.
சிகல (பாளி மொழியில் சிங்கம்) என்ற சொல் முதன் முதலாக தீபவம்சம் என்ற நூலிலேயே (4–5 ஆம் நூற்றாண்டு) அதுவும் ஒரே ஒரு முறை குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவைக் குறிக்கவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் (5–6 ஆம் நூற்றாண்டு) இந்தச் சொல் இரண்டு முறையே குறிக்கப்படுகிறது.
கிறித்து பிறப்பதற்கு முந்திய காலப் பகுதியில் இலங்கையில் சிங்கள இனம் என்ற ஒரு இனம் இருக்கவில்லை.
மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என அய்யத்துக்கு உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை (மாகம) அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோதபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவர்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்டன் கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்டன்’ என்ற அடை மொழி கொடுக்கப்பட்டது.
எனவே மகாவம்சத்

தின் க

தைநாயகனான துட்டன் கைமுனு (கிமு 101-77) தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான்.
இதனால் அவனும் எல்லாளனும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்டன் கைமுனு பவுத்த சமயத்தவன். மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரர் எல்லாளன் – துட்டன் கைமுனுக்கு இடையிலான போரைத் தமிழர் – சிங்களவர் இடையிலான போராக வேண்டுமென்றே சித்திரித்து விட்டார். துட்டன் கைமுனு பவுத்தனாக இருந்தும் அவன் முருக வழிபாடு செய்பவனாக இருந்தான். எல்லாளன் மீது படையெடுத்துப் புறப்படு முன்னர் கதிர்காமக் கந்தனின் அருள் வேண்டி அவரை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மேலும் மகியங்கனை தொடங்கி அனராதபுரம் வரை ஆண்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களைக் கைமுனு போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது.
இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு ‘இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்’ என சூளுரைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் – அதிகாரம் 25)
துட்டன் கைமுனு எல்லாளன் மீது படையெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. (1) எல்லாளன்தான் அசேலனைக் கொன்று அனராதபுரத்தைக் கைப்ப

ற்றி ஆண்டான். இந்த அசேலன் மூத்தசிவனின் மகனாவான். எனவே தந்தை வழியில் அவன் துட்டன் கைமுனுவின் பாட்டன் ஆவான். (2) அனுராதபுரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் முழு இலங்கைக்கும் மன்னன் ஆகவேண்டும் என்ற ஆசை.
துட்டன் கைமுனு – எல்லாளன் போரில் பவுத்தத்தை தழுவிய தமிழர்கள் துட்டன் கைமுனுவின் படையில் இருந்தார்கள். அதே போல் பவுத்தத்தைத் தழுவிய தமிழர்கள் எல்லாளன் படையிலும் இருந்தார்கள். எல்லாளனது படைத்தலைவன் நந்தமித்தன் என்பவனின் உடன்பிறப்பின் மகனான மித்தன் ஆவான். எனவே எல்லாளன் – துட்டன் கைமுனு போர் தமிழர் – சிங்களவர் போர் என மகாவம்ச ஆசிரியர் சித்திரிப்பது பொருந்தாது. ஆனால் இன்றைய சிங்களம் மகாவம்சத்தை முழுதாக விழுங்கித் தமிழர்களைத் தனது எதிரியாகப் பார்க்கிறது.
இன்று மகாவம்ச சிந்தனையே சிங்கள ஆட்சியாளர்களை வழி நடத்துகிறது. கைமுனுவின் தந்தை, புத்த பிக்குகள் உண்ட உணவின் மீதியை எடுத்து உருண்டையாக்கி துட்டன் கைமுனுவிடம் கொடுத்து சத்தியம் கேட்கிறார். அதாவது, தமிழர்களுடன் சண்டையிடாதே என்று. அந்த உணவினைத் தூக்கி வீசிய துட்டன் கைமுனு வேகமாகப் போய் படுக்கையில் குறண்டிக்கொண்டுப் படுக்கிறான்.
துட்டனின் தாயார் அவனிடத்தில் கேட்கிறார், கை கால்களை நீட்டிக்கொண்டு வசதியாகப் படுக்கலாமே மகனே என்கிறாள். அதற்கு துட்டன் கைமுனு பின்வருமாறு கூறுகிறான்:
“மகாவலி கங்கைக்கு அப்பால் தமிழர்களும், மறுபுறத்தில் கட்டுக்கடங்காத சமுத்திரமும் இருக்கும் போது நான் எப்படி கை காலை நீட்டி உறங்கமுடியும்?”
ஆனால் தமிழ்ப் பள்ளிகளில் “வடக்கே தமிழர்களும் தெற்கே சமுத்திரமும் இருக்கும் போது, நான் எப்படி நின்மதியாக படுக்கமுடியும்” என்று திரித்துப் பாட புத்தகங்களில் திரிக்கப்பட்டுள்ளது.
மகாவலி கங்கைக்கு மேலே என்று உள்ளதை உள்ளபடி கூறினால், தமிழர்கள் மலைப்பகுதியான கண்டிக்கும் மேலேயும் கிமு முதல் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது எண்பிக்கப்படுகிறது. அதனை மறைக்கவே வடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் என்று மாற்றிச் எழுதி வைத்துள்ளார்கள்.
வடக்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அதனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை என்று கூறும் வரலாறு இன்றுவரை பாடப் புத்ததங்களில் எழுதியிருப்பதன் நோக்கம் தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதுதானே!
கைமுனுவின் நினைவாகவே ஸ்ரீலங்கா படைப் பிரிவுகளுக்கு கைமுனு படைப்பிரிவு (புநஅரரெ சுநபiஅநவெ) சிங்க படைப்பிரிவு எனப் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதே போல சிங்க, கஜபா, விஜயபாகு, போன்ற சிங்களப்பெயர்களில் படைப்பிரிவுகள் இருக்கின்றன.
தமிழீழத் தேசியத் தலைவர் தனது 2005 ஆண்டு மாவீரர் உரையில் குறிப்பிட்டுள்ளது போல சிங்கள மக்கள் மகாவம்ச சிந்தனையில் மூழ்கிக் கிடப்பதால் அவர்களது சமூகப் பிரக்ஞையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்க முடியாது.

myNewBanner_1

WWW.tamilskynews.com

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: