ஒரு நண்பனுக்கு……

man

உனக்கு நான் அனுப்பிய
கண்ணீர்த் துளிகளை
உப்புத் தயாரிக்க
நீ
உபயோகித்துக் கொண்டாய்.

இருட்டில்
நடந்துகொண்டே
உன்
நிழல் களவாடப்பட்டதாய்
புலம்புகிறாய்

பாறைகளில்
பாதம் பதித்துவிட்டு
சுவடு தேடி
சுற்றிவருகிறாய்.

நீ
பறக்கவிடும் பட்டத்தின்
நூலறுந்ததை மறந்துவிட்டு
வாலறுந்ததற்காய்
வருந்துகிறாய்.

முதுமக்கள் தாழிக்குள்
மூச்சடக்கி முடங்கிவிட்டு
சுதந்திரக்காற்று
சிறைவைக்கப் பட்டதாய்
அறிக்கைவிடுகிறாய்.

உன்
இறகுகளை உடைத்துவிட்டு
சிறைகள் திறக்கவில்லையென்று
வாக்குவாதம் செய்கிறாய்.

விரல்களை வெட்டிவிட்டு
தூரிகை
தொலைந்ததென்று
துயரப்படுகிறாய்.

சில்லறைகளை சேகரிப்பதில்
மூழ்கிவிட்டு
மதிப்பீடுகளுக்குக்
கல்லறை கட்டுகிறாய்.

நிறுத்திவிடு நண்பனே.
நிறுத்திவிடு

சுவாசப்பையை
சுத்தீகரிப்பதாய் நினைத்து
நாசிகளுக்குள் இனியும்
நீர் இறைக்கவேண்டாம்.

Advertisements