முதல் காதலே! முதல் காதலே!

கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல்.
காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும்,
கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு.
“அன்று,
நான் அவள் மனதிலும்,
அவள் என் மனதிலுமாய்
எங்கள் காதலை வளர்த்தோம்
கம்மங்காட்டின் கடைசியிலும்
காளியம்மன் கோயிலிலும்
சோளக்காட்டின் சந்தினிலும்
செம்மண் புழுதியிலும்.
கதிராய், காவியமாய்,
செங்கரும்பாய், செந்தாமரையாய்
செழித்து வளர்ந்த காதல்
சூழ்நிலைச் சூறாவளியால்
சொந்தமின்றி போனது.
இன்று,
அவள் அவளின் வீட்டில் கணவனுடன்
நான் என் வீட்டில் என் மனைவியுடன்”
என சோக கீதம் வாசிப்பவர்கள் பலருண்டு.
உரிய பருவத்திற்கு முன்பே வரும் காதல் பெரும்பாலும் பாலினக் கவர்ச்சியாகவே உள்ளது. பள்ளிப்பருவத்தில் எதிர்பாலினரிடம் ஏற்படும் கவர்ச்சியால் பெற்றோர் சொல் காதில் விழாமல் காதலில் கரைவது உண்டு.
காதலில் மூன்று நிலைகள் உண்டு:
1) உடற்கவர்ச்சி
2) உள்ளக் கவர்ச்சி
3) ஈடுபாடு
முதலில் விழிகளில் வியந்து, இடையில் இருவரும் ஒருவரை ஒருவர் வசீகரித்து, கடைசியில் கைப்பிடித்தே தீருவேன் என்ற நிலை என மூன்று படிக்கட்டுகள் காதலில்.
வாலிப வயதில் தங்கள் துணை பற்றிய கற்பனை கணக்கில்லாமல் வருவதும், யாரைப் பார்த்தாலும் இவர் என் கற்பனைக்கு உயிர் கொடுப்பவரோ என்ற எண்ணம் எழுவது இயற்கைதான். அதில் பாதியாவது ஒத்துப்போனால் அவர்மீது ஓர் ஈர்ப்பு ஏற்படும். டீன் ஏஜ் காதலில் முதலிரண்டு நிலைகளின் ஆழம் அதிகம். ஆனால் அதனை மூன்றாம் நிலைக்குக் கொண்டு செல்ல முடியாததற்கு அவர்களின் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையும், முதிர்ச்சியின்மையுமே காரணங்களாகின்றன.
15 வயதுக்குள் உள்ளவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வேயில் அவர்களின் டீன் ஏஜ் காதல் 3 அல்லது 4 மாதங்களிலேயே முடிந்துவிட்டதாகக் தெரியவந்துள்ளது. டீன் ஏஜ் காதலர்களின் மூளையை அவர்கள் காதலில் திளைத்திருக்கையில் ஆராய்ந்தபோது, காதல் அவர்களுக்கு போதைப்பொருள் உண்ட மயக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன. Cocaine போதைப்பொருளுக்கு அடிமையானவர்களைப் போல் அவர்களின் நடவடிக்கைகள் இருந்துள்ளன.
கனவுகளைச் சுமக்கும் வயதில் காதலைக் கண்டுவிட்டால் மனம் வண்ணத்துப்பூச்சியாய் சிறகடிக்கும். கவிதைகள் வடித்து காவியம் படைக்க முயலும். இந்த முன்வயதில் வரும் காதல் கூடாவிட்டாலும் தன்னிலை பற்றி உணரவைக்கும். தனது விருப்பு, வெறுப்புகள், பலம், பலகீனங்கள் போன்றவற்றை அறியவைக்கும் ஆசிரியராக காதல் அமைந்துவிடுவதுண்டு
முதல் காதலை முன்னனுபவமாக மட்டும் கொண்டு முன்னேறியவர்களும் உண்டு. காதலில் வாழ்க்கையை மூழ்கடித்துக் கொண்டவர்களும் உண்டு. முன் வயதில் வரும் காதல் முறுக்கேறும் வாலிபத்தின் அறிகுறியாய்க் கொண்டு லட்சியத்தை நோக்கி உழைத்தால், வெற்றி தேவதையின் மணமாலை உங்களுக்கே!

Advertisements

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

WordPress.com.

Up ↑

%d bloggers like this: